வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன்.
அந்நாட்களில், கடலின் மேலடுக்கு நீரானது செங்குத்தாக வெகுண்டெழத் துவங்கியது. அது கிட்டத்தட்ட 100 அடி வரை சீறிப்பாய்ந்தது. 2004 டிசம்பர் 26- சுனாமி பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பரித்துச் சென்ற நிகழ்வானது, இக்கணம் வரை உள்ளத்தில் உறைந்து நிற்கிறது. ஆனால் நாகை மாவட்டத்தில், ஒரு கிராமத்தினுடைய மக்கள் மட்டும் சுனாமியின் சீற்றத்தை சற்றும் உணரவில்லை.
அவ்வாறு, அப்பகுதியில் கடலின் சீற்றத்தை தடுத்தது, அங்கு நெஞ்சை நிமிர்த்து, அலையை எதிர்த்து நின்ற மணல் குன்றுகளேயாகும். இவை உருவாக காரணம், இயற்கையோடு இயைந்த நம் முன்னோரது வாழ்க்கை முறைதான். பல நூறு வருடங்களுக்கு முன்பு முன்னோரால் வியூகம் வகுக்கப்பட்டு அமைக்கப்பட்ட அந்த குன்றை சுனாமி அலைகளினால் கடக்க இயலவில்லை.
முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் கடல் சீற்றம் காரணமாக அவ்வப்போது ஊருக்குள் தண்ணீர் புகுந்து பயிர்களை நாசம் செய்து கொண்டிருந்தது. இதனைத் தடுக்கும் பொருட்டு கடலில் இருந்து 150 அடி தொலைவு சென்று சுமார் ஆறு கிலோமீட்டர் நீளத்திற்கு பனையோலைகளையும், தென்னங்கீற்றுகளையும் நட்டு வைத்தனர் ஒவ்வொரு முறையும் அலை வந்து கரையைத் தொடும் போதும், அது கொண்டு வந்த மணலை இலைகளின் இடுக்குகளில் சேர்த்துவிடும். பின்னர் மேற்கு நோக்கி வீசும் காற்றானதும் சேர்த்து மணலைத் தள்ளித் தள்ளி காலப்போக்கில் அது மணல் குன்றாகிவிட்டது.அந்தக் குன்றானது கடலரிப்பினால் அழியாமல் இருக்க மண்ணைப் பிடித்து வைக்கும் சல்லிவேர் மரங்களான இராவணன் மீசை, குதிரைக் குளம்பு ,முந்திரி போன்ற மரங்களை நட்டு அந்த மணற்குன்றினை ஒரு எஃகு கோட்டைப் போன்று திடப்படுத்தினர்.
‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி’ என்ற முன்னோர் மொழிக்கேற்ப, முப்பது வருடங்கள் கழித்து அப்படியே மலை போன்று உருவெடுத்தது. இவ்வாறான மணல்மேடுகள் உலகிலேயே மூன்று இடங்களில்தான் உள்ளன. அவை ஹாலந்து ,டென்மார்க், மற்றும் இந்தியாவில் இங்குள்ளவை. இந்தக் குன்றானது, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் துவங்கி பூக்காரத் தெரு வரை நீண்டு செல்கின்றது.தற்பொழுது இவை தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் மட்டுமே பெருமளவு எஞ்சி நிற்கிறது.
கடலிணையும் ஊரிணையும் இணைக்கும் கால்வாய்.
இங்கு மழை நீரைக் கடலில் சேர்ப்பதற்காக மூன்று இடங்களில் மண்டிக்காடு (வடிகால்) வெட்டப்பட்டுள்ளது.சுனாமியின் போது அவற்றின் ஊடே, விளை நிலங்களுக்குள் உப்பு நீர் புகுந்து விட்டது. எனவே அந்த உவர் நிலங்களை மீட்டெடுக்க நிறைய ஆளுமைகள் வந்து பார்வையிட்ட போது தான் இந்த மணல் குன்று குறித்த ஆராய்ச்சியும் ஆவணப்படுத்தலும் துவங்கியிருக்கின்றன. இதுகுறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின், தமிழ் நாற்காலியின் நிதி திரட்டுனரான, திருமதி. ரேவதி அவர்கள் நடத்திய ஆராய்ச்சியினை பார்வையிட முன்னால் குடியரசுத் தலைவர், திரு. அப்துல் கலாம் வந்திருக்கிறார். பின்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர், பில் கிளிண்டன் வந்து பார்வையிட்டு விட்டு தமிழ் வேளாண்மை முறையினை இந்தோனேசியாவில் ஒரு பகுதியில் செயல்படுத்த அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். “இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரும் இங்கு வந்து ஆறு மாதக்காலம் தங்கி இந்த மணல் குன்றினைப் பற்றி ஆராய்ச்சி மேற்க்கொண்டார்,” என்று அந்த ஊரிலுள்ள முதியவர் திரு. மரியசெல்வம் கூறுகிறார்.
ஆனால் தங்களுடைய முன்னோரின் சுற்றுச்சூழல் சார்ந்த அறிவினை குறித்த தெளிவான சிந்தனை அங்குள்ள மக்களிடம் பெருமளவு இல்லை. எனவேதான் மணல்மேட்டிலிருந்து மணலை அள்ளி தாழ்வான பகுதிகளில் இருக்கும் அவரவர் நிலங்களை சமன்படுத்தி கொள்வது, விறகிற்காக அங்குள்ள மரங்களை வெட்டுவது போன்ற பணிகளைச் செய்கின்றனர். “நாங்கள் சிறுவயதில் இருந்த பொழுது பார்த்த மணற் குன்றின் உயரத்திற்கும் தற்பொழுது பார்க்கின்ற மணல் குன்றுக்கும் பெருமளவு வித்தியாசம் இருக்கின்றது. அதன் உயரம் குறைந்துக் காணப்படுகிறது” என்று அந்த ஊர் வாசியான, திருமதி கமலி கூறுகிறார்.
அங்கு விறகிற்காக வெட்டி எடுத்துச் செல்லப்படும் மரங்கள்.
இதுகுறித்து சில வருடங்களுக்கு முன்னர், தெற்கு பொய்கைநல்லூர் பள்ளியை சேர்ந்தமாணவர்கள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு ஒரு ஆய்வினை சமர்ப்பித்தனர். மணல் குன்றுகளின் அழிவிற்கு வழிவகுப்பதாக அதில் கூறப்பட்டிருப்பதாவது, ” மணல் குன்றின் பாதுகாப்பிற்காக அங்கு நட்டு வைக்கப்பட்ட மரங்கள் சொந்த தேவைகளுக்காக வெட்டப்படுகிறது”.
குன்றினைப் பாதுகாப்பதற்காக சவுக்கு ,பனை மரங்களை வனத்துறையினர் நட்டு பராமரித்து வருகின்றனர். அவ்வூரின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் மணல் குன்றின் முக்கியத்துவத்தை கிராம மக்களிடம் எடுத்துச் சொல்லி மணல் அள்ளுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சிலர் மணல் அள்ளுவதை நிறுத்தவில்லை. அன்றைய முன்னோரின் கடின உழைப்பினால் உருவான இயற்கை அரணான இந்த மணல் குன்றுகள், இன்று மனித ஆதிக்கத்தினால் அழிவை சந்திக்க நேரிடுகின்றது.
“மணல் குன்றுகள் நாட்டின் அரணாக செயல்படுகின்றன,”என்று 2000 வருடங்களுக்கு முன்னரே வள்ளுவர் கூறிவிட்டார். இதனை அளிப்பதன் மூலம் தங்களுக்கு தாங்களே அழிவின் பாதைக்கு வழிவகுத்து கொள்கின்றனர்.
பல நூறு வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த மணல் குன்றானது, தற்போதும் நம் முன்னோரது ஆக்கப்பூர்வமான சிந்தனைக்குச் சான்று பகரும் வகையில், காலத்தை வென்று நிற்கிறது.
புகைப்படங்கள்: வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன்.
![]() |
No responses yet