வீ. பிரியதர்ஷினி,ரி. ரியூஜிலீன்
கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலினால் அலையாத்திக்காடுகளின் பார்வை கோபுரங்கள், மரத்தினாலான நடைபாதைகள் போன்ற பெரும்பாலான இடங்கள்சூறையாடப்பட்டன.சேதமுற்ற பகுதிகளை புனரமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடந்தன;தற்பொழுது, இரண்டு மாதங்களாக முடுக்கி விடப்பட்டு, பணிகளும் முடிவடைந்துள்ளன.
சீரமைப்புப் பணிகள் மேற் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்திக்காடுகளின் மொத்தப் பரப்பளவு 119 கிலோ மீட்டர் ஆகும். இவற்றிற்கு ‘வெள்ளக்காடு’ என்றொரு பெயரும் உண்டு. இங்கு செப்டம்பர் முதல் நவம்பர் வரை காடெங்கும், மின்மினிப்பூச்சிகளின் கூட்டம் போல் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன;காரணம் கருங்கண்டல,நரிக்கண்டல், வெண்கடல் ,கருங்கண்டல் தில்லை, சோமுந்திரி, சோனாரேசியா,எபிடெலா போன்ற சாம்பல் நிற மரங்களே ஆகும். மழைக்காலங்களில் காட்டின் அழகு ஓர் மடங்கு மெருகேற்றபடுகின்றது; காரணம் வானத்தை தம் வண்ணச் சிறகுகளால் அழகூட்டும் கூலைக்கடா,பூநாரை போன்ற வலசை வரும் பறவைகளே. மேலும் பூசந்தின்னி,புனுகுப் பூனை,நரி போன்ற விலங்குகள் ஒலிஎழுப்பி, தாங்களும் அங்கு உள்ளோம் என்றவாறு சமிஞ்ஞை செய்து கொண்டிருந்தன. சிங்கி இறால், சம்பங்கி நண்டு,கொடுவா மீன் போன்றவை இப்பகுதியின் பிரதான கடல்வாழ் உயிரிகள் ஆகும்.
இவை ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடுகள், என்று கூறினால் அது மிகையாகாது; மாறாக இயற்கையால் இவ்விடத்தில் உருவாக்கப்பட்ட ஓர் ஒப்பற்ற காப்பரணாகும். 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் வேகத்திலிருந்து இப்பகுதியை காத்தது இவையே. இவற்றிற்கு இதுபோன்ற அலைகளை ஆற்றுப்படுத்தும் தன்மை உள்ளதாலேயே, அலை+ ஆற்றுக்+ காடுகள்= அலையாத்தி காடுகள் என்ற பெயர் பெற்றது.
முன்பெல்லாம் இதன் மகத்துவம் அரியாது,உள்ளூர்வாசிகள் காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டுவரும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்பொழுது இதனை தடுக்கும் நோக்கத்தில் வனக் காப்பாளர்கள் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு மாற்றேற்பாடு செய்துக் கொடுத்துள்ளனர்.” நாங்கள் காட்டின் உள்ளே சென்று அலையாத்தி விதைகளை சேகரித்து அவற்றை ஏரியின் ஓரத்தில்,மேடான இடங்களில் நட்டுவைத்து காட்டை விரிவடையச் செய்கின்றோம்”, என்று அங்கு பணிபுரிவோர் கூறினர். இவர்களது கண்காணிப்பினாலும் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாலும் பறவைகள் மற்றும் விலங்குகளை கடத்துவது,வேட்டையாடுவது போன்ற செயல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன; அவ்வப்போது நிகழவும் செய்கின்றன. அதிலும் அண்மையில் புனுகுப் பூனைகளை வலை வைத்து பிடித்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அங்குப் படகோட்டுபவர் கூறினார். பறவை இனத்தில்,கூழைக்கடா,பூநாரை ஆகிய இவ்விரண்டையும் பிடித்தால் மட்டுமே தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுமாம். அக்காட்டிற்குச் செல்லும் வழியில் ,நிறைய இறால் பண்ணைகளை காண முடிந்தது. மேலும் சாலைகள் சீர் அற்ற நிலையிலேயே காட்சியளித்தன. இவற்றை சரிவர பராமரித்தால், ஆலப்புழா போன்று நம்மூரிலலுள்ள இந்த சுற்றுலாத்தலமும் மேம்படும்.
கோரையாறு,பாமணி ஆறு, வளவனாறு,கிளைதாங்கி ஆறு, நசுவினி ஆறு,பாட்டு வனாச்சி ஆறு, கண்டபறிச்சான்கோரையாறு, மரைக்காகோரையாறு ஆகிய நதிகள் கடலோடு சந்திக்கும் பகுதியின் முகத்துவாரம், “லகூன்”எனப்படுகிறது. இந்த ஆழமற்ற பகுதியானது, ஒரு குட்டித் தீவு போன்று காட்சியளிக்கிறது. “தொட்டம்” என்ற இதன் பழைமைப் பெயரானது தற்போது மாறி லகூன், என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. உள்ளே ஆங்காங்கே பார்வை கோபுரங்களும் நடைப்பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.அதில் ஏறி காட்டின் ஒட்டுமொத்த அழகினையும் கண்டு இரசிக்கலாம். முத்துப்பேட்டை தலைமை வனச்சரகர் அலுவலகத்தில், ரூபாய் 1500 செலுத்தி,முன் அனுமதி பெற்றுக்கொண்டு, வனக்காவலர் ஒருவரின் பாதுகாப்போடு படகுப் பயணம் மேற்கொள்ளலாம். இதற்கென வனத்துறையினரால் நான்குப் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த காட்டினை பற்றியோ, இதில் விரவிக்கிடக்கும் இயற்கை அதிசயங்கள் பற்றியோ, இதன் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கே அவ்வளவாக தெரியவில்லை; எனவே விடுமுறை காலங்களில் வெளி மாவட்டங்களை நோக்கிப் படையெடுக்கின்றனர்,அதைத் தவிர்த்து இங்கு வந்து, இந்த இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்திக் காட்டின் அழகினை கண்டு களிக்கலாம் அல்லவா…
No responses yet