ஹரிணி ஜெகதீசன்.
உடலில் உள்ள ஊனம் ஒரு போதும் வாழ்க்கையின் வெற்றிக்கு தடை போடுவது இல்லை; மனவலிமை இருந்தால் போதும் மலையையும் பெயர்த்து விடமுடியும் என்ற தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார் ஒரு சிறுமி. பிறவியிலேயே இரு கைகள் இன்றி பிறந்த இவர் தனது கால்களால் கரகத்தை தூக்கி வைத்து நடனம் ஆடி வருகிறார்.
லெட்சுமி பிறவியிலேயே இரு கைகள் இன்றி பிறந்ததன் காரணத்தினால் இவரது பெற்றோர், இவரை 6 மாத குழந்தை பருவத்திலேயே ஒரு காப்பகத்தில்(அனாதை இல்லத்தில்)விட்டுச் சென்றுவிட்டனர். அந்த காப்பகம் மயிலாடுதுறையில் உள்ள மன்னம்பந்தலில் இருக்கிறது. நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க வைத்தும் பாதுகாத்தும் வருகின்றனர்.அக்காப்பகத்தில் உள்ள குழந்தைகளை விட லெட்சுமி செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
தற்பொழுது பதினோராம் வகுப்பு படிக்கும் இவர் சிறு வயதிலேயே கரகம் கற்றுக் கொள்வதில் ஆர்வமிகுந்தவராக இருந்தார். அதானல் நன்றாக கரகம் ஆட தொடங்கினார். அப்பெண் ஒரு விழாவில் கால்களினால் கரகத்தை தூக்கி ஆடும் போது அவ்விழாவில் உள்ள அனைவரும் வியந்து பாராட்டினர். மேலும் அவள் எழுதுவது, ஓவியங்கள் வரைவது, ஊசி நூல் கோர்த்து துணிகளை தைப்பது போன்ற வேலைகளை கால்களால் செய்கின்றாள். இரண்டு கைகள் இல்லாமல் என்ன செய்ய முடியும் என்று மனம் வருந்தாமல் அனைத்தையும் சாதித்துக் காட்டுகிறாள்.
உங்களுக்கு இரு கைகள் இல்லை என என்றாவது வருத்தப்பட்டது உண்டா?என்று அப்பெண்ணிடம் கேட்டபோது அதற்கு அந்தப் பெண் “நான் எனக்கு இரு கைகள் இல்லை என்று வருத்தப்படுவதில்லை ஏனென்றால் எனக்கு கைகள் இருந்தால் நான் சாதாரண மனிதர்கள் போல் இருந்திருப்பேன். எனக்கு கைகள் இல்லை என்று மற்றவர்கள் பரிதாபப்படும் போது எனக்கு ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தோன்றும்.அதனால் தான் நான் விருப்பத்துடன் கரகம் கற்றுக்கொண்டேன்” என்று அப்பெண் கூறினார்.
உலகத்தில் சாதாரண மனிதர்கள் படைக்கும் சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் சாதனைகள் பல என்றே சொல்லலாம். அதற்கு உதாரணமாக பார்வையற்ற, காது கேளாத, பேச வியலாத பெண்மணி ஹெலன் கெல்லர், ஆடம்ஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஊனமுற்றோர் நலனுக்காக அரும்பாடுபட்டுள்ளார்.
“மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில் பார்க்கக்கூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்பதும் ஐ.நா. சாசன விதிகளாகும்.
பெற்றோர்களும் தம் குழந்தைகளை அனாதை ஆசிரமம், குழந்தைகள் காப்பகம் போன்ற இடங்களில் விட்டுச் செல்லாமல் அவர்களை ஊக்கப்படுத்தி உரிய கல்விதரும் வழிவகைகளை ஆய்ந்து அவர்களை வாழவைக்க வேண்டும்.அரசு அளிக்கும் வாய்ப்புகளைப் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, தாழ்வான எண்ணம், ஊக்கமற்ற சிந்தனை போன்ற எதிர்மறை எண்ணங்களை எல்லாம் மனதிலிருந்து அகற்றி விட்டு எதிர்காலத்தை மாற்றுத் திறனாளிகள் ஒளிமயமாக்கிக் கொள்ள வேண்டும்.
Edited By வீ. பிரியதர்ஷினி
Photo Credit: ஹரிணி ஜெகதீசன்.
No responses yet