ரி. ரியூஜிலீன்
அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது திருக்குறள். முப்பாலாகப் பிரித்து அழகுடன் இணைத்து கோர்த்து விளக்கும் இந்த குரளானது, பல்வேறு பரிமாணங்களில் அனுக்கப்பட்டு, பற்பல சாதனைகளை இதன் வாயிலாக அனைவரும் படைத்திருக்கிறார்கள். அதில் 1330 குறளையும் சிறுவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒப்புவித்து சாதனை, மேலும் அக்குரளை தலைகீழாக எழுதி சாதனை, என்பனவற்றை எல்லாம் கடந்து வந்த நமக்கு, அந்த 1.5 அடி குரளை 1.5 அடி தாளில் ஓவியமாக வரைந்து வருகிறார் ஒருவர் என்று கூறினால் நம்ப முடிகிறதா!
சௌமியா இயல்
அதுவும், தான் வரையும் ஒவ்வொரு ஓவியத்திலும் கனவு மற்றும் உண்மைத்துவம் கலந்ததான சர்ரியலிசத்தை பயன்படுத்துகிறார் என்று கூறுவது வியப்பில் ஆழ்த்துகிறது.
புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் இயல், இந்த முயற்சியை தான் தற்போது கையில் எடுத்துள்ளார். பெயரைக் கேட்டால் சற்று சிந்திக்க வைக்கிறது. அது என்ன இயல், என்று. இவர் தமிழின் மீது தனக்கிருந்த தீராத பற்றின் காரணமாக சௌமியா என்ற தன்னுடைய பெயரை இயல் என்று மாற்றிக் கொண்டார். கடந்த ஓராண்டாக தன்னுடைய ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கும் இவர் 2023 ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்துவிடும் தன்னுடைய 1330 குறள்களையும் ஓவியமாக மாற்றும் பணி என்று கூறுகின்றார்.
அப்படி ஒவ்வொரு நாளும் ஒரு குறளை எடுத்துக் கொண்டு அதனை வரைந்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கங்களில் இயல் என்னும் புனைப்பெயரில் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் அந்தப் படங்களை வெளியிட்டு அதன் கூடவே விரிவுரையும் கொடுக்கின்றார். நோய்தொற்று காலத்தில் தினமும் ஓவியம் வரைவது எளிதாக இருந்தபோதும், தற்பொழுது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைக்கு சென்றாலும் தினந்தோறும் தூங்குவது சாப்பிடுவது போன்று அன்றாட ஒரு செயலாகவே ஓவியம் வரைவதை பார்க்கின்றார்.
திருக்குறள் ஓவியம்
நாளுக்கு ஒரு ஓவியம் தவறாமல் வரைந்து வருவதாக கூறுகின்றார். தான் வரையும் ஒவ்வொரு ஓவியமும் 3 முதல் 4 மணி நேரம் வரை காலம் பிடிக்கும் என்றும் கூறுகின்றார். நம் பழம்பெரும் தமிழின் வரலாற்றை அறிய முற்பட்ட இவர் அதன்மூலமே தமிழின் மீதான தனது ஆர்வத்தை அதிகரித்து கொண்டாராம். “எனவே தமிழின் மீது எழுந்த பற்றின் காரணமாகவும் ஏற்கனவே ஓவியங்கள் வரைவதில் இருந்த ஆர்வத்தின் காரணமாக இரண்டையும் ஒருசேர இணைத்து அந்த புள்ளியில் திருக்குறளை ஓவியமாக வரையலாம்”, என்று சிந்தனை பிறந்ததாக கூறுகின்றார். எனவே அப்போதிலிருந்து ஒரு நாள் ஒரு திருக்குறள் என்ற புதிய ஓவியம் முயற்சி உருவானது என்கின்றார்.
இப்படி அனைவரும் அன்றாடம் தன் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இவ்வுலகிலும் தனது ஓவியக்கலையின் மூலமாக தமிழை வளர்த்தெடுக்கும் இவர் போன்ற வெகு சிலரும் நம்மருகே உயிர்ப்போடு இருந்து கொண்டிருப்பதை பார்ப்பதற்கு சற்று நெகிழ்வாகவே இருக்கின்றது அல்லவா!
No responses yet