அ.மேனகா
இக்கிராமத்திற்குப் பெரும்பாலாகப் போக்குவரத்து வசதிகள் இல்லை, எனினும் இங்கு அமாவாசையன்று அதிகபடியான மக்கள் வர காரணம் தான் என்ன? புராணங்களின் படி, இராமர் இலங்கைக்குச் சென்று இராவணனை அழித்து, சீதையை மீட்டு வந்தார். பின், லட்சுமணன் மற்றும் அனுமனுடன் பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்காக, திருராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து அங்குள்ள குளத்தில் புனித நீராடியதாகவும் அச்சமயம் அவருக்குக் காட்சியளித்த சிவபெருமான் இத்தலத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும், பிதூர் தோஷம் மற்றும் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்று வரம் அளித்ததாகவும் சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.எனவேதான், தங்கள் முன்னோர்களுக்கு செய்யும் சடங்குகளின் மூலம் பிதுர் தோஷங்களை நீக்கிக் கொள்ள பல பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

இராமநாதசுவாமி திருக்கோயிலின் நுழைவாயில்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள இத்திருத்தலமானது, தட்டாங்கோவிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் ஒட்டுமொத்த அழகினையும் ஒருங்கிணைக்கும் இடமமாகத் திகழும், இத்திருக்கோவில் தோஷ நிவர்த்திப் பரிகாரங்களுக்கு பெயர் பெற்றதாக மட்டும் நில்லாமல், அதன் நுழைவாயில் முதல் கருவறை வரை கலை நுட்பத்தாலும் மிளிர்கிறது.
இதற்கு காரணமாக விளங்கியவர் சேரர் பரம்பரையை சேர்ந்த இராஜசேகர் வர்மன் ஆவர்.”மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலை கட்டியவர் இராஜசேகர வர்மன் தான் என்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு அதற்குச் சான்றுகளும் உள்ளன”, என்று கூறுகிறார் அக்கோவிலின் பராமரிப்பாளர், திரு. முருகேசன்.
இக்கோவிலின் நுழைவாயில் சமமான நிலப்பரப்பில் அமைந்திருந்தாலும், கோவில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இருப்பினும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படவில்லை. இக்கோவிலானது, அம்மாவாசை நாட்களின் வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி, ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்ச அமாவாசை, தை அமாவாசை தினங்களில்,பிதுர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். இதன் பொருட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் மற்றும் பல்துறை சார்ந்த உயரதிகாரிகள் உட்பட அம்மாவாசை தினத்தன்று சிறப்பு தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர்.
மன அமைதியைத் தேடும் நேரத்தில் இக்கோவிலை தரிசித்தால் மனஅமைதிக் கிடைக்கிறது என்றும் இத்தலதீர்த்தத்தின் மூலம் முன்னோர் வழி வந்த தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாகவும் நம்பப்படுகிறது. இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வந்து அருள் பெற்றுச் செல்ல விரும்புவோர், தஞ்சைக்கு வந்து, அங்கிருந்து சாலை மார்க்கத்தில் கோயிலை வந்தடையலாம்.
Edited by:ஹரிணி தினேஷ்குமார், ரி.ரியூஜிலீன்
No responses yet