ஹரிணி ஜெகதீசன்
திருநெல்வேலி என்றாலேயே முதலில் நம் நினைவிற்கு வருபவை, இருட்டுக்கடை அல்வாவும், நெல்லையப்பர் சுவாமி கோவிலும் தான். ஆனால் இவற்றிற்கெல்லாம் பெயர்போன இவ்வூரில்தான், ஒரு கிணற்றுக்குள் பல அதிசயங்கள் பொதிந்திருக்கின்றன, நாங்குநேரி ஸ்ரீ வானமாமலையப்ப பெருமாள் திருக்கோவிலும் இருக்கின்றது. இங்கு வேறெங்கும் இல்லாத திருமஞ்சனம் செய்த தைல எண்ணெக் கிணறு உள்ளது. இதனுடைய மற்றொரு சிறப்பம்சமானது, 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள அஷ்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

எண்ணெய்க் கிணறு
இத்திருக்கோவிலுக்கு, வானமாமலை என்ற பெயரைக் கொடுத்தவை; இதனைச் சுற்றியுள்ள மலையும் வனமும் தான். எனவே இங்கு வரும் பக்தர்கள் கடவுளின் அருளைப் பெற்றுச் செல்வதோடு, குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய இம்மூன்று நிலப்பரப்புகளையும், ஒரு சேரக் காணும்போது கண்களுக்கு பரவசமூட்டுமொரு வனப்புமிக்க காட்சியாக அமைகின்றது. இவை அனைத்திற்கும் அழகு சேர்க்கும் வகையில் இதன் அருகிலேயே ‘நாங்குநேரி’ என்ற ஏரி ஒன்றும் அமையப்பெற்றுள்ளது. இத்திருத்தலம் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
பிரதி ஆண்டு தை அமாவாசையன்று, வானமாமலை பெருமாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் கோலாகலமாக நடைபெறுகின்றது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற தலங்களில், பெருமாள் சுயம்புவாக காட்சியளிக்கின்றார். அதனைப் போன்றே இத்திருக்கோவிலிலும் பெருமாள், தானாகத் தோன்றிய சுயம்புவாக வீற்றிருக்கின்றார். இத்திருக்கோவிலில், மொத்தம் 11 சுயம்பு மூர்த்திகளைக் காணமுடிகிறது.

11 சுயம்பு சிலைகள் உள்ள கருவறை
தினந்தோறும் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெயானது, அருகில் உள்ள ஒரு கிணற்றில் சேகரித்து வைக்கப்படுகிறது. இதில் என்ன அதிசயம் என்று பார்த்தால், கிணற்றில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெயானது, எந்தவித காலநிலை மாறுபாட்டின் போதும் அதன் தன்மையிலிருந்து திரியாது அப்படியே உள்ளது. “இதற்கு காரணம், இறையாற்றலே. மேலும், இந்த எண்ணெய் நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குவதால், உடல்நலம் குன்றியோர் இதனை உட்கொண்டால் ஆரோக்கியம் கிட்டும் என்றும் தோல் நோய்கள் குணமாகும் என்றும்,” அவ்வூரைச் சார்ந்த முதியவர், திரு. இராம கிருஷ்ணன் கூறுகிறார்.
“தோத்தாத்ரி நாதர் திருக்கோயிலின் தல வரலாறானது, பெருமாள் கார்ய மகாராஜாவின் கனவில் வந்து நாங்குநேரி கோவிலின் நடுப்பகுதியில் தனக்கு ஒரு கோவில் எழுப்பி, பூசித்தருளுமாறு கூறியிருக்கிறார். அதன் பொருட்டு, நடுப்பகுதியில் உள்ள பெருமாளின் சிலையை தோண்டி எடுக்கும் போது, விக்ரஹத்தின் நெற்றிப் பகுதியில், மண்வெட்டி பட்டு இரத்தம் வடியத் துவங்கியது. இதனைத் தடுக்க, தைலக் காப்பிட்டு திருமஞ்சனம் செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை தைலக் காப்பீட்டு திருமஞ்சனம் தினந்தோறும் செய்து வருகின்றனர். இந்த தைலக் காப்பிட்டு திருமஞ்சனமானது 6 படி நல்லெண்ணெயுடன் சந்தனத் தைலமும் கலந்து பெருமாளுக்கு பூசிக்கப்படுகிறது. பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த எண்ணெய் அக்கோவில் பிரகாரத்தில் உள்ள, 25 அடி ஆழம் 15 அடி உயரம் உடைய அந்த அரிய கிணற்றில் சேமித்து வருகின்றனர். “கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இந்த கிணற்றில் உள்ள எண்ணெய்ப் பிரசாதமாக ரூபாய் இருபதுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த கிணற்றினை காண வருவோர்க்கு பார்வை கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது, “என அக்கோவில் அறங்காவலர், திரு. சுரேஷ் கூறுகின்றார்.

ஸ்ரீ வானமாமலை தோத்தாத்ரி நாதர் திருக்கோயில்
திருநெல்வேலியிருந்து, நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில், 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் நடை, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
புகைப்படங்கள்: ஹரிணி ஜெகதீசன்
No responses yet