மிதக்கும் தங்கத்தை உமிழும் திமிங்கிலம்- தற்போது அழிவின் விளிம்பிலிருக்கிறது

ரி. ரியூஜிலீன்

திமிங்கிலங்கள்..எடையில் கனத்தவை, அளவில்  மலையை ஒத்தவை, என இவ்வாறெல்லாம்  அவை தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. நான்கு கால்கள் கொண்ட ஃபியோமெசிடஸ் அனுபிஸ்  திமிங்கிலம், 36 ஆயிரம் கிலோ எடையுள்ள கில்லர் திமிங்கலம், ஆகிய இவையனைத்தும், தங்களின் எடையையும் உருவ அமைப்பையும் வைத்து சிறப்பாக அறியப்படுகின்றன. ஆனால் ஒரு வகைத் திமிங்கிலம் மட்டும் இவற்றிலிருந்து வேறுபட்டு, அதன் வாயிலிருந்து கக்கும் விலையுயர்ந்த, ஒரு பொருளினால் ஆச்சரியத்துடன் அறியப்படுகிறது.

ஆம், எண்ணெய் திமிங்கலமானது(sperm whale) கட்டில்பீஷ், ஆக்டோபஸ், போன்ற விலங்குகளை இரையாக்கிக் கொள்ளும் போது அவற்றின் கூர்மையான முள் இதன் வயிற்றுப்பகுதியை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக,  சுரக்கும் ஒரு மெழுகுப் பொருள்தான் அம்பர்கிரிஸ்; கருப்பு, வெள்ளை, சாம்பல் போன்ற நிறங்களில் காணப்படும்.ஸ்பெர்ம் திமிங்கலம் தனக்கு தேவையில்லை என்று வெளியேற்றும் ஒரு பொருளானது, தங்கத்தை விடவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், இது கடல் தங்கம் எனவும் மிதக்கும் தன்மை கொண்டிருப்பதால் இது மிதக்கும் தங்கம் எனவும் அழைக்கப்படுகின்றது.

அம்பர்கிரிஸ்

 இது கரையை வந்தடைய, பல மாதங்களோ ஆண்டுகளோ எடுக்கின்றன.  இவ்வகைத் திமிங்கிலங்கள், அம்பர்கிரிஸ், அதன் எலும்பு, மற்றும் தலைப்பகுதியில் சுரக்கும் ஒரு வித எண்ணெய் போன்றவற்றிற்காக பெரிதும் வேட்டையாடப்படுகின்றன.

 மேலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் திமிங்கலம் வேட்டையாடுவதும் அது சார்ந்த பொருட்களை விற்பதும் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது. மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் இது தடை விதிக்கப்படாததால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கையில் கிடைத்தாலோ அல்லது கரை ஒதுங்கினாலோ, அதனை அவர்கள் விற்றுப் பணமாக்கி கொள்கின்றனர். சர்வதேச சந்தையில், அம்பர்கிரிஸின் விலை கிலோ ஒன்றிற்கு ஒரு கோடியாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏனெனில், நறுமண திரவியங்கள் தயாரிப்பிலும், பல மருந்துப் பொருட்கள் தயாரிப்பிலும் இது பெரும்பங்கு வகிப்பதால். துபாயில் இதற்குத் பெரும்பாலானத்  தேவை நிலவுவதால், அவர்கள் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர். எனவே இதனை  வெளிநாடுகளுக்கு கடத்துவது போன்ற செயல்கள்  அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. “சமீபத்தில்கூட, முத்துப்பேட்டை கடற்கரை சாலையில் நீண்டநாள் ரோந்து பணி மேற்கொண்டு, ஒருநாள்  துபாய்க்கு அம்பர்கிரிஸ் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை அமைத்திருந்த   நாங்கள் அதனைக் கைப்பற்றி அரசிடம் ஒப்படைத்துள்ளோம்,” என்று குழுவில் இடம்பெற்றிருந்த வனக்காப்பாளர், திரு. சிவநாதன்  தெரிவித்துள்ளார்.

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் எலும்புக்கூடு

மற்றுமோர் அரிய நிகழ்வாக, இந்த அம்பர்கிரிஸை உமிழ்கின்ற, ஸ்பெர்ம் திமிங்கலத்தின் உடலானது, 1990களில் ஒருமுறை  நாகை மாவட்டத்தின், தெற்கு பொய்கைநல்லூர்  கடற்கரையோரம் ஒதுங்கியுள்ளது.  பின்னர் அதன் எலும்புக்கூட்டை பதன்படுத்தி, தற்போது நாகையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர்.

தெற்குப் பொய்கை நல்லூர்  கடற்கரையை ஒட்டி வாழ்கின்ற கிராம மக்கள், மீன்பிடிக்க செல்லும்போது, “அத்திப் பூ பூத்தாற்போல, சிறு சிறு துண்டுகளாக அம்பர்  அரிதாக கிடைக்குமென்றும், அதனை மக்கள் எடுத்துச் சென்று தங்க நகை வியாபாரிகளிடம் விற்று விடுவர் என்றும்,” கிராமவாசிகள் கூறுகின்றனர். இன்றெல்லாம், அம்பர்கிரிஸ் என்ற பெயரில் சந்தைகளில் போலியான மாற்றுகளும் உலா வருகின்றன. அதனை விலை கொடுத்து நிறைய பேர் வாங்கியும் செல்கின்றனர்.  தற்போது அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் ஸ்பெர்ம் திமிங்கிலமும் இடம் பிடித்து விட்டது. இயற்கையின் ஒவ்வொரு வடிவத்தையும், இறைவனாக வழிபடும் மரபைக் கொண்ட நம் நாட்டில், இன்னொரு வியப்பூட்டும் விந்தை என்று சொல்லப்போனால் குஜராத்தின், ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் திமிங்கிலத்திற்கேன ஒரு கோவிலே கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இயற்கையால்,சூரிய ஒளி மற்றும் உப்பு நீர் பட்டு இவை இணைந்து உருவாக்கப்படுகின்ற அம்பர்கிரிஸை உமிழும் திறனுடைய திமிங்கிலங்கள் காக்கப்பட வேண்டும். “இல்லையெனில் பெரும் பிறவிகளான டைனோசர் போன்றவை  அழிந்தது போன்று இவையும் அழியக்கூடும்,” என்று கடல்சார் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இருப்பினும் இந்தோனேசியாவின்  சில பகுதிகளில் திமிங்கிலத்தை வேட்டையாடுவது இன்றளவும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்பொழுது கால நிலை மாறுபாட்டாலும் கடல் வெப்பம் அதிகரிப்பதாலும் சமீபத்தில் நிறைய திமிங்கிலங்கள் இறந்து கரையொதுங்கும் சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.”அறிவியல், விஞ்ஞானம் போன்ற இவையெல்லாம் ஒரு எல்லையோடு முடிவடைந்து விடும் அதையும் தாண்டி இயற்கை செயல்படும்”, என்ற விவேகானந்தரின் சித்தாந்தம் இக்கனம் நினைவுக்கு வருகிறது;  இயற்கையை நாம் அழித்தால் அது நம்மை அழித்துவிடும். இயற்கை வளங்கள் மூலம் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தருபவை விலங்குகளும் ,மரங்களும் தாவரங்களுமே. அவ்வாறெனில் இந்த ஸ்பெர்ம் திமிங்கிலங்களின் அழிவு என்பது, அவற்றில் அழிவு மட்டுமன்று; அதிலிருந்து வரும் ஒரு புதுப்பிக்க இயலாத வளத்தின் அழிவும் தான். எனவே கடல் உணவு சங்கிலியின் ஒரு மாபெரும் அங்கமான திமிங்கிலங்கள், குறிப்பாக இந்த ஸ்பெர்ம் திமிங்கிலங்களைக் காப்பதன் மூலம், நீர்வாழ் சுற்றுச்சூழல், சமநிலையில் இருக்கும்.

புகைப்படங்கள்: ரி. ரியூஜிலீன்,

நேசனல் ஜியோகிராஃபி.

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.