14 வயதிலிருந்து பட்டுத் தறி நெசவு செய்து வரும் பெண் நெசவாளி

By Harini Dineshkumar

காஞ்சிபுரம் திருபுவனம் போன்ற இடங்களில் தான் பட்டுத் தறி நெசவு மற்றும் பட்டுப்புடவைகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கிறது. ஆனால் நமது டெல்டா பகுதியில் உள்ள தஞ்சையில், கடந்த 600 முதல் 700 வருடங்களாக நெசவு தொழில் நடைபெற்று வருகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? 

ஆம், தஞ்சையிலுள்ள பழைய அரசு மருத்துவ கல்லூரியை சுற்றியுள்ள இடத்தில் கிட்டத்தட்ட 700 வருடங்களாக நெசவுத் தொழில் நடைபெற்று வருகிறது. அங்கே நான் சந்தித்த மிகவும் கடினமான உழைப்பாளி தான் ஜெயந்தி. இவர் தனது 14 வயதிலிருந்தே நெசவுத் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதை செய்து வருகிறார். அவர் மட்டுமில்லாமல் அவ்விடத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவுத் தொழில் தான் செய்து வருகிறார்கள், என்றும் பெருமையுடன் கூறுகிறார். 

14 வயதிலிருந்து பட்டுத் தறி நெய்து வரும் ஜெயந்தி

ஆனால் இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் அவ்விடமே நூறு ஆண்டுகளுக்கு முன்பு நெசவாளர்களுக்குறிய இடமாக இருந்துள்ளது. 

ஆனால் தற்போதைய காலகட்டத்தில், அதிக வருமானம் இல்லாத காரணத்தினாலும் பல அரிய வகை‌ இயந்திரங்கள் கண்டுபிடிப்புகளாளும் இத்தொழில் மிகவும் நலிவடைந்து கொண்டே வருவதாக வருத்தம் தெரிவிக்கிறார். 

சேலைகள் மற்றும் வேஷ்டி நெசவு செய்வதில் பல நுட்பங்களை அறிந்து வைத்திருந்த ஜெயந்தி, அவருடைய வாழ்க்கை பயணத்தை மிகவும் சுவாரஸ்யமான முறையில் கூற ஆரம்பிக்கிறார். 

தறி போடும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஜெயந்தி

“என்னுடைய பெயர் ஜெயந்தி. எனக்கு தற்பொழுது 40 வயது ஆகிறது. என்னுடைய 14 வயது முதல் நெசவுத் தொழிலை நான் செய்து வருகிறேன். என் தாய் வழி மற்றும் தந்தை வழி குடும்பங்களில் உள்ள அனைவரும் நெசவுத் தொழில் தான் செய்து வந்தார்கள். தினமும் அதை பார்த்த எனக்கும் நெசவில் மிகுந்த ஆர்வம் தோன்றியதால் நானும் அதில் ஈடுபட ஆரம்பித்தேன். தொடக்கத்தில் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு புடவை முடிப்பதற்குள் என் கைகள் மிகவும் காயப்படும். ஆயினும் அதன் மீது எனக்கிருந்த ஆர்வம் குறையவில்லை. ஒருவ்வொரு  துணி நெய்து முடிக்கும் பொழுதிலும் மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் என் மனதில் ஏற்படும். நான் செய்யும் இத்தொழிலில் எனக்கு போதிய வருமானம் இல்லை தான். ஆனாலும் இதை செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. என்னால் என் குடும்பத்தையும் என் குழந்தைகளையும் இதனைப் பயன்படுத்தி நிச்சயம் காப்பாற்ற முடியும். அவர்களையும் அவர்களின் தேவைகளையும் என்னால் நிச்சயம் பூர்த்தி செய்ய இயலும்” என்று நம்பி‌க்கை தெரிவிக்கிறார். 

ஜெயந்தி தன் கைகளால் நெசவு செய்த பட்டுப் புடவை

மேலும் அவர், “ஏறத்தாழ ஒரு புடவை நெய்ய பத்து நாட்கள் ஆகும். ஒரு வேஷ்டி நெய்ய 7 நாட்கள் ஆகும். ஒரு புடவை நெய்து முடிக்க கிட்டத்தட்ட மூன்று நபர்கள் சேர்ந்து உழைக்க வேண்டும். இவ்வாறு நாங்கள் செய்யும் பொழுது மாதத்திற்கு மூன்று புடவை என்ற விதத்தில் ஒரு புடவைக்கு 2000 முதல் 3000 வரை லாபம் என்று கணக்கிடும் பொழுது மாத வருமானம் 10 ஆயிரத்தை தாண்டுவதில்லை. ஆயினும், என் மனதில் உள்ள நெசவுத்தொழில் மேல் உள்ள காதல் என்றும் குறைந்ததில்லை. ஒவ்வொரு புடவை செய்து முடிக்கும் போதிலும் என் மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.” என்று கூறி நம்பிக்கையுடன் புன்னகை பூக்கிறார்.

மேலும் அவர் அவருடைய திருமண வாழ்க்கை பற்றிக் கூறி இன்னும் சுவாரசியம் ஊட்டுகிறார். “எனது திருமணத்திற்கு பின்னர், எனது கணவரிடம் என் ஆர்வத்தை பற்றி கூறினேன். ஆதலால் எனக்கு அவர் ஒரு பெரிய நெசவு செய்யும் இயந்திரத்தை பரிசாக அளித்தார். அது என்னுடைய நெசவு செய்யும் கனவில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. என்னுடைய மனதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நெசவுத் தொழிலில் எனது கணவர் எனக்கு மிகப்பெரிய உதவி. அவர் எல்லா இடங்களிலும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். எனக்கும் அது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தொழில் மூலம் என்னுடைய மகளை நான் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். மனதில் மகிழ்ச்சியோடு செய்யும் வேலை, என்றுமே சொர்க்கம் தான்” என்று கூறும் பொழுது அவர் முகம் பூரிக்கிரது.

திருமணத்திற்குப்பின் ஜெயந்திக்கு அவரது கணவர் பரிசாக அளித்த தரி போடும் இயந்திரம்

 இவர் கூறியதையெடுத்து மற்ற வீடுகளை சென்று பார்க்கும் ஆர்வம் என் மனதுக்குள் தோன்றியது. அவ்வாறு சென்று பார்க்கும் பொழுது, நான் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். ஏனென்றால் வீடுகளில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு தரி வேலைக்கு தேவையான பொருட்களையும் தறி போட உதவும் பெரிய இயந்திரத்தையும் வைத்துள்ளனர். அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தறியின் மேலேயும் நெசவுத்தொழில் மேலயும் மட்டற்ற காதல் கொண்டுள்ளார்கள் என்றே கூறலாம். 

இது போல தனது லட்சியத்தில் உறுதியாக இருக்கும் பெண்களுக்கு நாம் உதவி செய்வதின் மூலம் நமது சமுதாயத்தையும் நமது வாழ்க்கையையும் கண்டிப்பாக வளம் பெற செய்யலாம்.

ஆனால் காலமும் சூழ்நிலையும் அனைத்து நேரங்களிலும் நமக்கு சாதகமாக இருக்காது. சிலரோ மகிழ்ச்சியில் தழைக்கின்றனர். சிலரோ கவலையில் மறிக்கின்றனர். ஆனால், வரவோ செலவோ பற்றாக்குறையோ, அதை அனைத்தையும் தாண்டி ஏதோ ஒரு உந்து சக்தி, ஆசையோ? கனவோ? நம் அனைவரையும், இன்னும் வாழ்க்கையின் பயணத்தில் அழகாக அழைத்துச் செல்கிறது.

Photo credit: Harini Dineshkumar.

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.