எ. சுரேகா
“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரூம் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் பாடிய சிறப்புமிக்கது திருவாரூர் ஆழித்தேராகும். திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ஆலயம் சைவ சமய மரபில் பெரிய கோயில் என்றழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் திருவாரூர் தேர்த்திருவிழா ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரை உடையது திருவாரூர் தான். பெரும்பாலான கோயில்களில் தேர்த் திருவிழா நடைபெற்றாலும், திருவாரூர்த் தேர்த் திருவிழாவுக்கென்றே தனிச் சிறப்பு உள்ளது. அதற்குக் காரணம் ஆழித் தேரின் பிரம்மாண்டம்தான். காவிரி டெல்டாவில் உள்ள திருவாரூர், வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாக மட்டுமல்லாமல்,தேருக்குப் பெயர் போன ஊராகவும் திகழ்கிறது. இக்கோயில் சைவ சமயத்திற்கே உரிய பெரிய பீடமாய் விளங்குவது மட்டுமல்லாமல் இங்கு பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி நிலையை அடையலாம் என்ற நம்பிக்கையுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைப்பெற்ற இத்தேர்த்திருவிழா, 1927 ஆம் ஆண்டு ஆழித்தேரோட்டத்தின்போது தீ விபத்தினால் தேர் முற்றிலும் எரிந்துவிட்டது. நின்றுபோன தேர்த் திருவிழாவானது, பிறகு 1930 ஆம் ஆண்டு புதிய வடிவில் தேர் உருவாக்கப்பட்டு மீண்டும் தேரோட்டம், 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. பிறகு 1970 ஆம் ஆண்டு மு. கருணாநிதி மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியால் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது.
திருவாரூர் தியாராஜர் தேரானது மூன்றாவது முறையாக உருவாக்கப்பட்டது. இத்தேர் பீடம் உயர்ரக மரங்களால் 36 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் மீது மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகளால் 60 அடி உயரத்திற்கு கோபுரம் எழுப்பப்பட்டு 96 அடி உயர தேராக காட்சி அளிக்கும். தேர் கோபுரத்தினை சுற்றி சுமார் 5 டன் எடையுள்ள வண்ணத்துணிகள் கொண்டு அலங்கரிக்கப்படும்.450 டன் எடையுள்ள 96 அடி உயர தேரினை இழுக்க 15 டன் எடை கொண்ட வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வடக்கயிறின் நீளம் சுமார் 1 கி.மீ. தூரமாகும்.இந்த பிரம்மாண்ட ஆழிதேரை நிறுத்த “ஹைட்ராலிக் பிரேக் “பயன்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் நடைபெறும் இத் தேர்த்திருவிழாவானது மிகவும் பெயர் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவது வழக்கம்.
பக்தர்கள், ‘வடம்’ எனப்படும் பெரிய கயிறுகளைப் பயன்படுத்தி இந்த ஆழித்தேரை இழுத்து வருகின்றனர். சிலை அழகாக அலங்கரிக்கப்பட்டு சிவனடியார்களால் கோயில் மேற்கு நுழைவு வாயில் வழியாக கொண்டுவரப்படும். அன்றைய தினம் விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேசுவரர், உள்ளிட்ட ஐந்து தேர்கள் இழுக்கப்படும்.” ஆரூரா தியாகேசா” என்று கோஷமிட்டு மக்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்துவார்கள். “ஆழி தேர்” ஊர்வலம் திருவாரூர் கோவிலை சுற்றியுள்ள நான்கு முக்கிய மாட வீதிகளில் வலம் வருகிறது.
தமிழகம் முழுவதிலுமிருந்து, லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியை சிறப்புற செய்வார்கள். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேரானது, திருவாரூர் தேரின் மாதிரியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
Edited by :shamyuktha
No responses yet