ரி. ரியூஜிலீன்
நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மரத்தின் பங்கு என்ன என்று பார்த்தால், அது வாசக்கால், சாளரம், அலமாரிகள், மேசை, நாற்காலி, போன்றவற்றையே கூறுவோம். ஆனால் சென்னை போரூரில் உள்ள தச்சுக் கலைஞர், அப்பர் லட்சுமணன் அவரது தொழிற் கூடத்திலும் வீட்டிலும் மரத்தில் ஆகாத பொருட்களை காண்பது அரிதே.மிகவும் பிரம்மாண்டமான அலங்கார விளக்கு, மரத்தாலான சைக்கிள், மோட்டார் சைக்கிள், தட்டு, தண்ணீர்க் கோப்பை, சாப்பாட்டு கேரியர், அரிக்கேன் விளக்கு, மின்விசிறி என்று நீண்டு கொண்டே போனது அவர் மரத்தால் செய்த பொருட்கள். அவற்றுள் நம்மை ஈர்க்கிறது அந்த மரத்தாலான காரும், அவர் எதிர்காலத்தில் செய்யவிருப்பதாக கூறும் மரத்தாலான குக்கரும் தான். ஏனெனில் இரண்டுமே எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளவை. அதுமட்டுமல்லாது இதுவரை யாரும் செய்திராத ஒன்று. இதை எவ்வாறு உங்களுக்கு செய்ய தோன்றியது என்று கேட்ட பொழுது அவர் கூறியதாவது, “நான் ஏழாவது தலைமுறை தச்சு கலைஞன்.
என் அப்பாவிடம் இருந்து அடிப்படை மர வேலைகளை கற்றுக்கொண்டு, நான் சென்னைக்கு வந்தேன் ஆனால் இங்கு ஒரு தச்சு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை. அவன் பின்னிருக்கும் விஞ்ஞானத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை எனவே தச்சுக் கலை நுணுக்கங்களையும் அதிலுள்ள அறிவியல் விஞ்ஞானங்களையும், என் குருவான கணபதி ஸ்தபதியிடம் கற்றுக்கொண்டேன்.
மரத்தாலான காரை ஓட்டும் திரு. அப்பர் லட்சுமணன்பணம் சம்பாதிப்பது என்னுடைய பிரதான நோக்கம் என்று மாறாக என்னை செதுக்கிய இந்த கட்சிகளுக்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். பின் ஒருநாள் அதில் புதுமையைப் புகுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதில் மிதிவண்டி, பைக் முதலானவற்றை செய்தேன். மேலும் காரும் செய்யத் தொடங்கினேன்.மரத்தாலான அலங்கார பொருட்கள்அதுக்கு மாருதி 800 இன்ஜினை எடுத்துக்கொண்டேன். பெட்ரோல் டேங்க், இன்ஜினைத் தவிர மற்ற எல்லாம் மரத்தால் ஆனவை இவற்றை தமிழக அரசின் பூம்புகார் நிறுவனத்தின் கண்காட்சியில் வைத்தேன். அதில் பெரும் வரவேற்பு கிடைத்தது. என்னுடைய அந்த கார் விற்பனையும் ஆனது. இதனைப் பார்த்து கேரள அரசாங்கம் என்னுடைய காரை ஓட்ட அனுமதி கொடுத்த போதிலும் தமிழக அரசு இதனின் உறுதித்தன்மையை கேட்டு, அதனடிப்படையில் சாலையில் ஓட்ட அனுமதி கொடுக்கவில்லை. மேலும் இது இலுப்பை மரத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட கார் என்பதால் இது தீப்பற்றும் அபாயம் எப்போதும் ஏற்படாது”.
சுற்றுச்சூழலை மாசுபடாமல் காப்பதற்கும் மழை பெறுவதற்கும் மரங்கள் இன்றியமையாதது என்னும் இக்கால கூற்றை எவ்வாறு கருதுகிறீர்கள் என்று கேட்டபோது, “நாங்கள் ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன் ஐந்து விதைகளை வைத்து பூஜை போட்டு பின்னரே அந்த விதைகளை நட்டு வைத்து விட்டு தான் இந்த மரங்களை வெட்டுவோம். எண்ணெய் அதிகமாக இருக்கும் முற்றிய மரங்களால் தான், காட்டுத்தீ போன்றவையெல்லாம் ஏற்படுகின்றது. நாங்கள் இப்பொழுது மரங்களை கடைகளில் வாங்குவதோடு மற்றும் இறக்குமதி செய்கிறோம். தமிழக அரசு காடுகளில் உள்ள முற்றிய மரங்களை வெட்ட எங்களுக்கு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்”, என்று கூறினார்.
நம் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட 70 வயதிற்கு மேலான பல மரத்தச்சர்கள் உள்ளனர். அவர்களுக்குள், பல அபூர்வமான அறிவியல் நுணுக்கங்கள் எல்லாம் ஒளிந்திருக்கின்றன. அது அவர்களோடு மட்டும் நின்றுவிடாமல், வரும் தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வதற்காக அதனை ஆவணப் படுத்தும் வகையில் ‘தச்சர்களின் கையேடு’, ‘மனிதனும் மரமும்’, போன்ற 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கின்றார். மேலும் பயிற்சிக் கூடம் அமைத்து அதில் பல மரத்தச்சர்களை உருவாக்கி வருகின்றார்.
“தற்பொழுது மரத்தினாலான அலங்கார பொருட்கள் மேலும் பழைமை பொருட்களை நோக்கி மக்கள் நகர்ந்து கொண்டிருப்பதால் எங்கள் தொழில் மென்மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் புன்னகையுடன் கூறுகின்றார்”.
தன்னுடைய எதிர்கால திட்டங்களாக அவர் கூறுபவை, மனிதன் பிறக்கும் தருவாயில் பயன்படுத்தும் சிப்பாங்கட்டையிலிருந்து இறக்கும் கணம் வரை அவன் வாழ்வில் பயன்படுத்தும் 240 வகையான மரச்சாமான்களை காட்சிக்கு வைக்கப் போவதாக கூறுகின்றார். மேலும் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 மரத்தச்சர்களைக் கொண்டு பிரம்மாண்டமான ஒரு மரக் கோவிலை உருவாக்கப் போவதாக கூறுகிறார். இந்த கோவிலின் சிறப்பம்சம் எனப்படுவது அனைத்து நட்சத்திரங்களும் பொருந்திய 27 வகையான மருத்துவ குணம் மிக்க மரங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட இருக்கிறது.
சாமியின் கருவறையில் உருவ வழிபாடு ஏதும் இல்லாது ஆங்காங்கே தியான கூடங்கள் மட்டும் அமைய இருப்பதாகக் கூறுகின்றார். அதனை சுற்றிலும் சிற்ப கல்லூரிகள் வைத்து, பல்வேறு கோவில்களுக்கு தேவையான தேர், சப்பரம், போன்றவற்றையெல்லாம் செய்து கொடுக்கப் போவதாகவும் கூறுகின்றார். தன்னுடைய தலைமுறையோடு இந்த தொழில் முடிந்து விடாது தன் மகனையும் இந்த தொழிலுக்கே படிக்க வைக்கின்றார். அவரது நோக்கமானது தன் கலை தன் காலத்திற்குப் பிறகு இந்த மண்ணில் வாழ வேண்டும் என்பதே.
No responses yet