வீ.பிரியதர்ஷினி, ரி.ரியூஜிலீன்.
தமிழினம் என்றாலேயே தங்களின் வாழ்வியல் முறையின் அனைத்துப் பக்கங்களையும் பண்பாட்டுடனும் பாரம்பரியத்துடன் இணைப்பவர்களே. அவ்வகையில், வாழ்வியலின் ஓர் அங்கமான உணவு என்பதனையும்,வெறும் அடிப்படைத் தேவையாக மட்டும் பார்க்காது, அதனினுள்ளும் பாரம்பரியத்தை புகுத்தி வைத்திருந்தனர். ஆயினும், ஒரு காலகட்டத்தில், ‘பசுமைப்புரட்சி’ போன்றவற்றால் நம் பாரம்பரிய நெல் வகைகள் பயன்பாடற்று ஆங்காங்கே சிதறிப்போயின.
ஒற்றை நெல் சாகுபடி முறை
இதன் மூலம், அழிவின் விளிம்பிலிருந்த நம் பாரம்பரியத்தை, நமக்கு மீட்டுத் தந்தவர் தான் நெல் ஜெயராமன்; 174 பாரம்பரிய நெல் வகைகளை 15 ஆண்டு கால முயற்சியில் நம் மண்ணிற்கு கண்டறிந்து தந்தவர். 500 நெல் இரகத்தையாவது தன் வாழ்நாளில் மீட்டெடுக்க வேண்டும் என்ற இவர்தம் இலக்கை நெருங்கும் முன்னரே, மரணம் அழைத்துக் கொண்டது. இவருக்குப் பின்னர் இவர் விட்டுச் சென்ற பணி என்னவாகும்? இனி நெல் திருவிழா அதே சீரான முறையில் நடைபெறுமா? என்பது போன்ற வினாக்களுக்கெல்லாம் மனம் திறக்கிறார், தற்போது இவற்றையெல்லாம் நிர்வகிக்கத்துக் கொண்டிருக்கும் ராஜீவ், “சித்தப்பாவின் கனவே எண்ணற்ற இளைஞர்களின் பார்வையினை இயற்கை விவசாயம் நோக்கி திருப்புவதே. அதில் ஒரு இளைஞன் தான் நான்”. இதுவரை ஐயா நெல் ஜெயராமனால் நடத்தப்பட்ட நெல் திருவிழாவிற்கு இரு நாட்களில் 10000 பேர் வந்ததே அதிக எண்ணிக்கை; ஆனால் இம்முறை அவர் அண்ணன் மகனான ராஜீவ் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட திருவிழாவிற்கு ஒரேநாளில் 7500 பேர் வருகை புரிந்துள்ளனர். நெல் ஜெயராமன் அவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போதும், அவர் தம் உயிரையும் பொருட்படுத்தாது தன் பணியில் காட்டிய நாட்டத்தை கண்டு, இதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்து இந்த பனிக்குள் வந்திருக்கிறார் ராஜீவ்.
இவர் கொல்கத்தாவில் காஸ்ட் ஆடிட்டிங் முடித்திருக்கிறார். நெல் ஜெயராமனது இலக்கே, இவரது இலக்காகவும் இருக்க வேண்டும் என்பது கிடையாது, மாறாக இவர் ஒரு படி முன் சென்று தற்பொழுது அவரின் கரங்களில் உள்ள அந்த 174 வகை நெற்களையும், மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். காரணம் “ஒருபுறம் நெல் இரகங்களை மீட்டெடுத்துக் கொண்டே இருந்தால், மறுபுறம் அதனைப் பாதுகாத்து வைக்க எங்களால் மட்டுமே இயலாது, எனவேதான் இதனை ஆதரிக்க மக்களின் துணை இன்றியமையாதது. அதற்கு இதனை நுகர்வோரிடம் அறியப்படுத்த வேண்டும்”, என்கிறார் ராஜீவ்.
மைய ஒருங்கிணைப்பாளர்- திரு.ராஜீவ்
இயற்கை விவசாயிகள் சங்கத்தின் உயர்மட்ட குழுவினரது,உந்துதலில் செயல்படும் இவர், நெல் ஜெயராமனின் வழி நின்ற அனைத்து இயற்கை விவசாயிகளின் குரலாக ஒழித்துக் கொண்டிருக்கிறார். விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதற்கு, அவர்கள் விளைவித்தப் பாரம்பரிய நெல்லைக் கொள்முதல் செய்ய இடம் வேண்டும். இவ்வகையில் தான் உற்பத்தியாளர்களான, விவசாயிகளையும் நுகர்வோரையும், ஒன்றிணைக்கும் பாலமாக திகழ்கிறார் ராஜீவ். எப்படியென்றால், இவர்களின் மேற்பார்வையில் மூன்று வருடம் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு, மத்திய அரசின் தரச்சான்று தருகின்றனர். அதற்கான அங்கீகாரம், தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இவர்களிடமே உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவது எளிதாகிவிடும்.
நம் நாட்டின் முதுகெலும்பு என விவசாயத்தை கூறிவிட்டு, தற்பொழுது ஒட்டு இரகங்கள், இரசாயன உரங்கள் போன்றவற்றைக் கலந்து நஞ்சை ஏற்றிக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இயற்கை விவசாயத்திற்கு திரும்பலாம் என்று இவர் போன்ற சிலர் கூறினால், உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமா? என்று பரவலான எதிர்மறைக் கருத்துக்களும் கூறப்படுகின்றன. ஆனால், செயற்கை முறை விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 2100 கிலோ நெல், மகசூலாக கிடைக்கிறது. ஆனால் ஆதிரங்கத்தில் உள்ள இந்த நெல் பாதுகாப்பு மையத்தில் ஒரு ஏக்கருக்கு 4120 கிலோ மகசூல் செய்து, சாதனை படைத்துள்ளனர்.
“செயற்கை விவசாயத்தில், பயிருக்குள் ஊடுருவும் பூச்சிகளை அழிக்கப் பூச்சிச் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன; முட்டையிலிருந்து வெளிவந்த புழுவானது, அதனை உட்கொள்ளும்போது மெல்ல சாகும்; அந்தப் பயிரிலிருந்து வரும் அரிசியை உட்கொள்ளும் நாமும் விதிவிலக்கல்ல, சிறு வயதிலேயே நிறைய இணை நோய்களைச் சொந்தமாக்கிக் கொள்கிறோம், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களையும் தான்”, என்று இதன் விளைவுகளைக் கூறுகின்றார், மையத்தின் கள ஒருங்கிணைப்பாளர், திரு. உதயகுமார் அவர்கள்.
பாரம்பரிய நெல் விதைகளும் அவற்றைப் பாதுகாக்க பயன்படும் கோட்டையும்
கல்லிமடையான், கண்டசாலி, ராஜமுடி, சிங்கினிகார், வாளன், என்று இவற்றின் பெயர்களைச் சொன்னால், நம் பாரம்பரிய நெல் வகை தான் என்று நம்மில் எத்துனைப் பேருக்கு தெரியும்? ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நம் நிலத்தின் பாரம்பரிய நெல் இரகங்கள் எங்கே என்றுக் கேட்டால், வயல்வெளிகளில் அதனை காட்ட இயலும்; பிற மாநிலங்களில் இது சாத்தியமன்று. இதற்கெல்லாம் காரணமாக விளங்கியவர்தான், ஐயா நெல் ஜெயராமன் அவர்கள். அவர் இந்த மகத்தான பணியினை முன்னெடுத்துச் சென்றது, தனது கரத்தினை நம்பியே மட்டுமன்று, நம் இளைஞர் சமுதாயத்தின் கரங்களையும் தான். “எவ்வளவு தொழிலைச் செய்தாலும் நாம் அனைவரும் உணவிற்கு விவசாயின் கரங்களை நோக்கியே இருக்கின்றோம்.’என்று வள்ளுவர் உரைக்கின்றார்.
இவ்வளவு பெருமைக்கும் உரிய விவசாயி ,எவ்வளவு இடர் வந்தாலும் மண்ணிணை நேசித்து, மக்களுக்கு நஞ்சில்லா உணவை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் விதைக்க முற்பட வேண்டும். “இதன்படி இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, ஏதேனும் ஐயம் எழும் பட்சத்தில் அதனைச் சமூக வலைதளங்களின் குழுக்கள் மூலம் தீர்த்து வைக்க வழிவகைச் செய்துள்ளோம். மேலும் நெல், அரிசி, போன்றவற்றின் தேவை இருப்போர் எங்களை அணுகினால், அவர்களை நேரடியாக விவசாயிகளிடமே கொண்டு சேர்ப்போம்”, என்று நம்பிக்கையுடன் கூறுகிறார், திரு. ராஜீவ்.
No responses yet