கடலரிப்பினால் சிதைந்து கொண்டிருக்கும் டேனிஷ் கோட்டை !

செ.கௌதமன்

தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத்  திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டையானது, தற்போது கடல் அரிப்பினால்  சேதம் அடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியிலுள்ள சுமார் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வரலாற்றுப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையின் தடுப்பு சுவரானது, முன்னரே கடலரிப்பினால் அழிந்து வந்த நிலையில் தற்போது கோட்டையும் அழிவின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இந்தக் கோட்டையின் அடித் தளத்தில் பத்திற்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. மேல் தளத்தில், ஆளுநர்கள், இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட அதிகாரிகளின் அறைகளும், கீழ்தளத்தில், பண்டகசாலை, சிறைச்சாலை, சமையலறை, ராணுவ வீரர்களுக்கான அறைகள் ஆகியவையும்  அமைந்துள்ளன. கோட்டையின் உட்புறத்தில், புல்வெளி தளமும் முதல் தளத்தை பார்வையாளர்கள் சுற்றி பார்பதற்கான நடைபாதையும்  அமைக்கப்பட்டிருந்தன. இது டேனிஷ் பாணியில் உள்ளூர் தொழிலாளர்களின் உதவியுடன், ஒவ் ஜிட்ஜே  என்பவரால் கட்டப்பட்டது. அரண்மனையின் உள்ளே உள்ள பகுதியானது, ஒரு சிறிய ஐரோப்பிய நகரத்தைப் போல வடிவமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது, இந்த டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோட்டையினுள்ளே பழங்காலப் பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. கடலை நோக்கிய கோட்டைச் சுவர்கள் சுற்றுச்சூழலின் உப்பு தன்மை காரணமாக காலப்போக்கில் அரிக்கப்பட்டன. தரங்கம்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த பழமையான பொருட்கள், பண்டைய நாணயங்கள் போர்க்கருவிகள், முதுமக்கள் தாழி, கடவுள் சிலைகள், போர் வீரர்கள் பயன்படுத்திய உடைகள், உள்ளிட்ட பழமையான பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கம்பீரமாய் காட்சியளிக்கும் டேனிஷ் கோட்டையின் மறுபக்கம், கடல் அலைகளின் சீற்றத்தால் பாதிக்கபட்டு வருகிறது. கடந்த ஆண்டு அடுத்தடுத்து ஏற்பட நிவர், புரேவி புயல்களால் கடல் சீற்றம் ஏற்பட்டு, கோட்டையின் தடுப்புச்சுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகள் இடிந்து விழுந்தன. இந்த பாதிப்புகள் தற்போது வரை சீரமைக்கபடாததால், தற்போது தொடர்ந்து ஏற்பட்டுவரும் கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டையின் பிரதான சுவர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்து வந்தால், மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரித்து, வரலாற்றுச் சின்னமான டேனிஷ் கோட்டை முற்றிலும்  பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, கோட்டையை சுற்றி உள்ள கடற்கரையோர பகுதி முழுவதிலும் நிரந்தர கருங்கள் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும், என தொல்லியல் துறையினர், தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி, இவற்றை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த பண்பாட்டுச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், சமுக ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Edited by ரா. கோகிலா

Tags:

No responses yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Comments

No comments to show.