By Sureka E.
கோடைகாலங்களில் கடற்கரையை விரும்பாமல் யாராலும் இருக்க இயலாது. அக்கடற்கரையிலும் கண்களுக்கு இனிய சுற்றுலாத்தலமான மனோராவைப்பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மனோரா கோட்டை
75 அடி உயரமுள்ள ஆறுகோண கோபுரம் கொண்ட மனோரா பொழுதுபோக்கும் இடமாக மட்டும் நில்லாமல் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

மனோரா கோட்டையின் கோபுரம்
1815 ஆம் ஆண்டில் நெப்போலியன் போனபார்டை வாட்டர்லூ போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி கொண்டதை மராட்டிய மன்னர் சரபோஜி II நினைவு கூறும் விதமாக இக்கோட்டையை கட்டினார்.

மனோரா கோட்டை பற்றிய செய்திகள் அடங்கிய கல்வெட்டு
ஒரு கல்வெட்டில்,”பிரிட்டிஷ் ஆயுதங்களின் வெற்றி மற்றும் போனபார்ட்டின் வீழ்ச்சியை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயர்களின் நண்பர் மற்றும் கூட்டாளி” என்று பொறிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களை பற்றி சரபோஜி II கூறும் கல்வெட்டு
முந்தைய காலங்களில் இக்கோட்டை துறைமுகமாகவும் கப்பல்கள் கட்டும் மையமாகவும் பயன்பட்டுள்ளது. அச்சமயத்தில் கலங்கரை விளக்கமாக பயன்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோடைகாலங்களில் அரச குடும்பத்தினர் இங்கு வந்து பொழுதைக் கழிப்பார்கள் என்றும் அவர்களை காக்க வரும் வீரர்கள் கோட்டையை சுற்றி சிறிய சிறிய கொட்டகைகள் அமைத்தும் கோபுரத்தின் உச்சியிலும் தங்கி கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இக்கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் இலங்கை தெரியும் என சரஸ்வதி மஹாலில் உள்ள மனோரமாவை பற்றிய நூல் தெரிவிக்கிறது.

மனோரா கோட்டையில் உள்ள ஒரு பகுதி
இக்கோட்டையை சுற்றியுள்ள அகழி, கடல் நீரால் சூழப்பட்டு இருந்தாலும், இக்கட்டிடம் பாதிக்கப்படாத அளவிற்கு வடிகால் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய நுட்பமாக கட்டப்பட்ட மனோரமாவை, மராட்டியர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம்.

மனோரா கோட்டையிலுள்ள அகழி
இத்தகைய சிறப்புடைய மனோராவை நம் தமிழக அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்து தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது.
இக்கோட்டையை பற்றிய மேலும் விவரங்கள், தஞ்சாவூர் அரண்மனையில் உள்ள சரஸ்வதி மகாலில் ஓலைச்சுவடிகளாகவும் புத்தகங்களாகவும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்விடத்தில் சரபோஜி II அவர்களின் கலாச்சார பங்களிப்பு, கையெழுத்துப் பிரதிகள், ஓவியங்கள், கலைப் பொருட்கள் என அனைத்தும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளன.
மனோரா கோட்டையில் குறிப்பிடத்தக்க கட்டிடங்களான கல் கட்டடங்கள், சில்வன் அமைப்புடன் கூடிய கட்டடங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளால் கண்டிப்பாக பார்வையிட வேண்டியவையாகும். இக்கோட்டையின் பழமையிணையும் கட்டிடத்தின் உறுதியையும் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் இரண்டு மாடிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை. கடற்கரையில் வீசும் உப்புக் காற்று காரணமாக இக்கோட்டையின் கோபுரம் வலுவிழந்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கோட்டையின் உச்சிக்கு செல்வதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர். எனினும் இரண்டாவது மாடியிலிருந்தே அவ்விடம் காண்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கிறது.
இக்கோட்டை தஞ்சாவூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சரபேந்திர ராஜன்பட்டினம் என்ற மல்லிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இக்கோட்டையை காண விரும்புபவர்கள் தஞ்சாவூரிலிருந்தோ பட்டுக்கோட்டையிலிருந்தோ அல்லது ஒரத்தநாட்டிலிருந்தோ சாலை மார்க்கத்தில் செல்லலாம்.
Edited by Harini Dineshkumar.
Photo credit: Sureka E.
No responses yet