By Harini Dineshkumar
இதுவரை நாம் சிவலிங்கத்தை வட்ட வடிவில் தான் பார்த்துள்ளோம். ஆனால், இங்கே உள்ள சிவலிங்கமுமோ சதுர வடிவில் உள்ளது. தமிழகத்திலேயே இங்கே ஓர் இடத்தில் மட்டும் தான் இத்தகைய அமைப்புடன் சிவபெருமான் காட்சி அளிக்கிறார். இத்தகைய அமைப்பிற்கும் இதற்கான காரணமும், நம்மில் பலர் அறியாத புதிராகத்தான் உள்ளது. அப்புதிருக்கு நாம் இப்பொழுது விடை தெரிந்து கொள்வோம்.

சதுர வடிவில் காட்சியளிக்கும் பிரம்மபுரீஸ்வரர்
சுமார் 1600 வருடங்களுக்கு முன்பு சித்தரால் கட்டப்பட்ட சிவன் கோயில்தான் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். 108 சிவாலயங்களில் ஒன்றான இத்திருக்கோயிலில் பல சுவாரஸ்யங்கள் மறைந்துள்ளன. அதே சமயத்தில் இக்கோவிலின் நிலை மிகவும் கவலைக்கிடமான ஒன்றாக உள்ளது.

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
பனி மற்றும் மழைக்காலங்களில் இக்கோவிலில் உள்ள அனைத்து சிலைகளிலும் ஒருவிதமான ஈரத்தன்மை உருவாகிறது. இதைப் படித்தவுடன் நம்மில் பலருக்கு அதன் மேல் பனி படிந்து இருக்கலாம் என்று எண்ணம் தோன்றியிருக்கும். அப்படியெனில் அக்கோவிலில் உள்ள சுவர்களிலும் அத்தன்மை இருந்திருக்க வேண்டும் ஆனால் அனைத்து சுவர்களும் கதகதப்பான தன்மையிலும் வெப்ப நிலை மாறாமலும் உள்ளது.
மேலும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கருவறையில் இருக்கும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் மற்றும் ஸ்ரீ நித்ய கல்யாணி அம்மனும் மரப்பல்லி ரூபத்தில் காட்சி கொடுப்பதாக நம்பப்படுகிறது.

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள மரப்பல்லி
இதற்கேற்ப அக்கோவிலில் பல இடங்களில் நாம் மரப்பல்லியை காணலாம். மேலும் இக்கோவிலில் உள்ள சிலைகளுக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்வதற்காக கோவிலிலேயே சந்தனக்கட்டை இழைத்து எடுத்துக்கொள்ளும் வாகாக பதித்து வைக்கப்பட்டுள்ளது.

கருங்கல்லில் பதித்து வைக்கப்பட்டுள்ள சந்தனக்கட்டை
இத்தகைய சிறப்பம்சம் வாய்ந்த இத்திருக்கோயிலை பராமரித்து வருபவர் ஒரு விவசாயி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், இக்கோவிலின் கருவறை முதல் சுற்றுப்புறம் வரை அனைத்தையும் சின்னத்தம்பி என்ற 40 வயது விவசாயி , தாமாக முன்வந்து கடந்த 25 ஆண்டு காலமாக பராமரித்து வருகிறார். மேலும் அவர் இக்கோவிலின் நன்மைக்காக எடுக்கும் முயற்சிகள் ஏராளம். அறநிலையத்துறை செய்யவேண்டிய பல பூஜைகளை, தன் சொந்த செலவிலும் மக்களிடம் நிதி திரட்டியும் செய்து வருகிறார்.

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பராமரித்து வரும் விவசாயி சின்னத்தம்பி
இந்நிலையில் இக்கோவிலின் நந்தி திருடு போனது. இதைப்பற்றி காவல்துறையில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை, என்று வருத்தம் தெரிவிக்கிறார் இக்கோயிலை பராமரித்து வரும் விவசாயி சின்னத்தம்பி.

திருடுபோன தந்திக்கு பதிலாக மக்களிடம் நிதி திரட்டி சுவாமிமலையில் இருந்து புதிதாக வாங்கி வரப்பட்ட நந்தி
மேலும், பல வருடங்களாக சரியான பராமரிப்பற்று கிடந்ததால், இக்கோவிலின் மேற்கூரை மழை காரணமாக மூன்று வருடங்களுக்கு முன்னர் இடிந்து விட்டது. ஆனால் இதுவரை சீர் செய்யப்படவில்லை. இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை என்று கூறுகிறார் விவசாயி சின்னத்தம்பி.

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்லின் இடிந்துபோன மேற்கூரை
மேலும் இவர் இக்கோயிலைப் பற்றி பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கிறார். இக்கோவிலுக்கு சொந்தமாக எந்த பொருட்களும் இல்லை என்றும் ஒரே ஒரு சங்கு மட்டும்தான் மிச்சம் என்றும் கூறுகிறார்.

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சங்கு
இக்கோவிலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அந்நிலத்தில் தென்னை தோப்பு அமைந்திருப்பதாகவும் அங்கே அறநிலையத்துறை பெண் அதிகாரி ஒருவர் நெல் சென்டர் அமைத்து பெரும் இடையூறு செய்வதாகவும் கூறுகிறார். இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் வந்து ஆய்வு செய்தும் எந்த பலனும் இல்லை என்று கூறி பெரும் வருத்தம் தெரிவிக்கிறார்.

சிதலமடைந்த பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்லின் வலப்பகுதி

சிதலமடைந்த பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்லின் இடப்பகுதி
மேலும் மேலும் இன்னல்களை மட்டுமே சந்திக்கும் இத்திருக்கோவில் நெடாரில் உள்ள ஆலக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலை தரிசிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தஞ்சையில் உள்ள நெடார் என்னும் ஆற்றைத் கடந்து சாலை மார்க்கத்தில் செல்லலாம்.
Photo credit : Harini Dineshkumar
No responses yet