வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன்.
காலங்காலமாகவே ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்கள் நடந்துகொண்டு வந்திருக்கின்றன. இதில் டேனீஷ், இந்தியாவில் கொல்கத்தா நகரிலும் நாகை அருகே உள்ள தரங்கம்பாடியிலும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். அதில் நம் பகுதியில் உள்ள இந்த தரங்கம்பாடி கோட்டையானது டேனிஷ் காரர்கள் கட்டிய கோட்டையில் இரண்டாவது மிகப்பெரிய கோட்டையாகும்.
நுழைவாயிலில் டென்மார்க் பாதிரியார் சீகன்பால்க்கிற்கு நிறுவப்பட்டுள்ள சிலை
இது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டையாகும். இந்தக் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டுத் தரங்கம்பாடியில் கடல் வாணிகத்தை செய்து கொண்டிந்திருந்தனர்.
டேனிஷ் கோட்டையின் உட்புறம்
கோட்டைக்கு அருகே அக்காலத்தில், இராணுவ தளபதி தங்குவதற்கும் டேனிஷ் ஆளுநர்கள் தங்குவதற்கும் இரு மாளிகைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டன. அவற்றில் தற்போதைய கடல்சார் அகழ்வைப்பகமாக உள்ள அன்றைய இராணுவ தளபதியின் மாளிகையை அதன் பழமை மாறாது, சீரமைப்பு பணிகளைப் மேற்கொண்டு வருகின்றனர்.
சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் அருங்காட்சியக கட்டிடம்.
இதற்கு “டென்மார்க் அசோஷியேஷன்” லிருந்து நிதி அளிக்கப்பட்டு தற்போது சீரமைப்புப் பணிகள் மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பணிகள் அவ்வப்போது தடைபட்டு திரும்பவும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டென்மார்க்கில் இருந்து வந்து பார்வையிட்டு செல்கின்றனர். தற்போது தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் இந்த மாளிகையானது இருக்கிறது.
இங்கு டேனிஷ், அடக்குமுறை ஆட்சியை கையாளவில்லை என்பதனை கூறும் வகையில் அவர்கள் தாங்கள் எடுத்துச் சென்ற பழங்காலப் பொருட்களைத் திரும்பி வந்து வைத்திருக்கின்றனர்.
மேலும், டேனிஷ் கோட்டைக்கு எதிரே டிரான்குபார் கடல்சார் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அதில் உள்ள குயின்ஸ் நூலகத்தில் பழமையான புத்தகங்கள் காணப்படுகிறது. பழைய மரப்படகு ஒன்று முக்கிய இடத்தை பிடித்துள்ளது. “தமிழகத்தில் அவர்களின் நினைவாக இருக்கும் இந்த ஒரு கோட்டையைப், பாதுகாத்து வைப்பதற்காக இதனை சீரமைத்து வருகின்றனர்” என்று அங்கு பணிபுரியும் திருமதி. அமுல் ஜோதி கூறுகிறார். மேலும் இந்த கடல்சார் அகழ் வைப்பகத்தில் புத்தகங்களும் பண்டையகால தமிழர் பண்பாட்டு பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
1860 – 1884 காலகட்டத்தில் நீதிமன்றமாகவும், 1910 – 1985 காலகட்டத்தில் உப்புக் கிடங்காகவும், அருகிலுள்ள ஆளுநர் மாளிகை பயன்படுத்தப்பட்டது. 2004 சுனாமியின்போது இந்த மாளிகை மிகக் கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, டென்மார்க் நாட்டினரின் உதவியோடு 2011-ல் இந்த மாளிகையைப் புதுப்பித்தது தமிழக அரசு. தற்போது இந்த மாளிகை தொல்லியல் துறையின் வசம் பயன்பாடற்று இருக்கிறது. இதன் அருகே காற்றினால் தேகத்தை வருடிச் செல்லும் ஓர் அழகிய கடல் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.
கடலரிப்பினால் காணாமல் போன கோட்டை தடுப்புச்சுவர்.
இந்தக் கடலின் சிறப்பு என்னவென்றால் இதன் அலைகளில், உடல் நலனிற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்ததான மாசற்ற ஓசோன் காற்று வீசுகிறது. எனவே இங்கு தினந்தோறும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் திரளான சுற்றுலாப் பயணிகள், இதில் குளித்துச் செல்லத் தவறுவதில்லை.
கோட்டையின் மேல் புறத்திலுள்ள அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தொல் பொருட்கள்.
ஆனால் இங்கு அலையானது சற்று வீரியத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. கடல் அரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக ஆங்காங்கே கற்களையும், பாறைகளையும் கொட்டி பராமரித்து கொண்டிருக்கின்றனர். ஆயினும், கடலரிப்பு ஏற்படுவதன் மூலம் அங்குள்ள கோட்டையின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக அழிந்து விட்டது. ஒரு காலத்தில் 100 மீட்டருக்கு அப்பால் இருந்த கடலானது காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது கோட்டைக்கு 10 மீட்டர் இடைவெளியில் வந்துவிட்டது. எனவே இந்நிலை தொடர்ந்தால் ஒரு வரலாற்றுப் புராதான சின்னத்தை நாம் இழக்க நேரிடும். ஆகவே இதை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையானது தஞ்சை அரசரான இரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு கி.பி 1620 இல் கட்டப்பட்டது. எனவே இது டேனிஷ் கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துரைப்பது மட்டுமல்லாது, நம் பகுதிக்கும் பெருமை சேர்க்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவு சின்னம் என்றே கூறலாம். கோட்டையின் மேல் அடுக்கில் உள்ள அருங்காட்சியகத்தில், தமிழ் எழுத்துக்களால் ஆன ஒப்பந்தப் பத்திரங்கள். மேலும் 5 லட்சம் வருடம் பழமையான கல் கோடரிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
எனவே இவற்றை அழிய விடாது காப்பதற்கு, இதுபற்றிய வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, ” வருடம் தோறும் ஜனவரி மாதம், பல கல்லூரிகளிலிருந்து குறிப்பிட்ட மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கோட்டை பற்றிய வரலாற்றை எடுத்துக்கூறும் நோக்கத்துடன் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.இதில் விருப்பம் உள்ளவர்கள் வந்து கலந்துகொண்டு பயனடையலாம்,” என்று அங்கு நுழைவாயிலில் நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்தில் பணிபுரியும் திரு. ஹரிஹரன் கூறுகிறார்.இக்கோட்டையானது நாகையிலிருந்து, 54 கீ.மீ தொலைவில் தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. இங்கு வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை நாளாகும். எனவே ஏனைய நாட்களில் நம் பண்பாட்டு கூறுகளைப் பற்றி அறிந்துகொள்ள முற்படுவோர் இங்கு வந்து அவற்றை தெரிந்து கொள்வதோடு இந்த வனப்பு மிக்க சுற்றுலாத் தலத்தினயும் பார்த்து இரசிக்கலாம்.
புகைப்படங்கள்: வீ. பிரியதர்ஷினி, ரி. ரியூஜிலீன்.
No responses yet