ரி. ரியூஜிலீன்
அழிந்து வரும் நம் தமிழக பாரம்பரிய நாட்டின மாடுகளைக் காத்து பெருக்கிடும் நோக்கத்துடன், தமிழகத்தில் 12 இடங்களில் அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடு, மாடு பண்ணைகள் நிறுவப்பட்டன. அதில் ஒரு பண்ணை, 495 ஏக்கரில் அமைக்கப்பட்ட இடம் தான் கொருக்கை கிராமம். இது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே அமைந்துள்ளது. அதிலும் அழிவின் விளிம்பிலிருந்த உம்பளச்சேரி காட்டுமாட்டினத்தை பாதுகாக்கும் நோக்கில் துவங்கப்பட்டது.
500க்கும் மேற்பட்ட மாடுகளைக் கொண்ட இந்தக் கால்நடை பண்ணையில் ஆண்டுக்கு ஒருமுறை, 100 மாடுகள் ஏலத்தில் விடப்படும். இணையவழியில் முன் பதிவு செய்கையில் டெல்டா பகுதி என்பதால் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுவே அங்குள்ள வழக்கமாகும். ஆனால் கடந்த இரு வருடங்களாக ஏழமானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
“எப்போதும் சரிவர நடக்கும் ஏலம் இந்த இரண்டு ஆண்டுகளாக கமிஷன் வாங்கும் பொருட்டு சிலர் நடத்த விடாது தடுக்கின்றனர். கூடவே இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ‘ரிட் மனு’ தாக்கல் செய்துள்ளனர்,” என்று பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கன்றுகளை, வயது அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யாது, எடை வைத்து நிர்ணயம் செய்தது, போன்ற பல இன்னல்களை முந்தைய ஆண்டுகள் நடத்தப்பட்ட ஏலங்களில் சந்திக்க நேரிடுகிட்டது. கஜா புயலினால் சிதலமடைந்த மாட்டுக் கொட்டகைகள் இன்றளவும் முழுமையாக சீரமைக்க படவில்லை.
இந்த கால்நடை பண்ணையானது, இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. அதில் முதலில் ஒரு பண்ணையில், கன்றுகளும் கறவை மாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பின் சிறிது தூரம் சாலையில் பயணித்துச் சென்றால், அங்குள்ள பண்ணையில், இளம் பசுக்கள், காளைகள் ஆகியவற்றைக் காண முடிந்தது. “கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யவும் பண்ணையினைப் பராமரிக்கவும் அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இங்கு பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் சுய செலவில் தங்களால் முடிந்தமட்டில் பணிகள் மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர். ஏலம் போகாததால், இந்த இரண்டு ஆண்டுகளாக மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை எங்களால் சரிவர பராமரிக்க முடியவில்லை,” என்று அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமன்று, அங்குள்ள அலுவலக கட்டிடங்களும் பல இடிபாடுகளுடனேயே காணப்பட்டன. மேலும் அங்கு கால்நடைகளுக்கு தீவனப் புற்கள் விளைவிக்கும் நிலங்களெல்லாம், தற்போது தரிசாக கிடைக்கின்றன. இதனை அரசு முறையான வகையில் எடுத்துப் பராமரித்தால், அழிந்துவரும் நம் பாரம்பரிய மாட்டினங்கள் காக்கப்படும். அத்துடன் கால்நடைத் துறையும் மேம்படும். ஏனெனில் உயரத்தில் குறைவாகவும் கால்கள் நெட்டையாகவும் உள்ள இவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு திறன் மிக்கவை எனவே இவை தானாக அழிவதில்லை; மாறாக அளிக்கப்படுகின்றன.
இவற்றை அழிக்க பெருமளவு கூறப்படும் காரணம்; இத்தனை கோடி மக்கள் தொகைக்கு பால் தேவையை நாட்டு மாடுகளால் சமன் செய்ய முடியாது, என்பதுதான். பால் உற்பத்தி பெருகியதோ என்னவோ, பலவித நோய்களும் குறைபாடுகளும் கூடிக்கொண்டே போகின்றன. நாட்டு மாட்டிலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து தான், பால் பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன.
இவ்வளவு பலனை நமக்கு கொடுக்கயிலும், அவை அழிந்து கொண்டுதான் போகின்றன. ‘கால்நடைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2019’ இன் படி, கடந்த 27 ஆண்டுகளில் 238% கலப்பின மாடுகளின் தொகை அதிகரித்து இருப்பதும், 26% நாட்டின மாடுகள் அழிந்து இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.இதன் மூலம் அழிக்கப்படுவது வெறும் ஒரு இனம் மட்டுமல்ல, நம் பாரம்பரியத்தின் பெருமையும் தான். அன்றொருநாள் ஏறுதலுவுதலுக்கு இழுக்கொன்று வந்தபோது இளைஞர்கள் அலையெனத் திரண்டு வந்து கடல் முன் அமர்ந்து தத்தம் உரிமையை மீட்டு சென்றனர். தமிழகமெங்கும் இது போன்று அழிந்து வரும் நம் மண்ணின் உயிரினங்களை மீட்டெடுப்பது இன்றியமையாதது.
புகைப்படங்கள்: ரி. ரியூஜிலீன்
No responses yet